சென்னை: போக்குவரத்து விபத்துகளைத் தடுப்பதற்காகவும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணிய வேண்டும், ஸ்டாப் லைன் கடந்து வாகனங்கள் நிறுத்தக்கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான அபராதம் என போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையாக அபராதம் விதிக்கப்பட்டு போக்குவரத்து காவல்துறை செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து காவல்துறையின் கடும் நடவடிக்கையினால் கடந்த ஆண்டுகளின் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை விட நடப்பு ஆண்டான 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறைந்திருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 265 விபத்துக்கள் நடந்திருப்பதும், அவற்றில் 269 நபர்கள் உயிரிழந்தும் உள்ளனர். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 238 விபத்துகளில் 240 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். நடப்பாண்டான 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 214 விபத்துகள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றுள் 216 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு விபத்து வழக்குகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதைக் காணலாம். 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது உயிரிழப்பு வழக்கு விகிதம் 2022ஆம் ஆண்டில் 10.78%-மாக குறைந்துள்ளது. மேலும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023ஆம் ஆண்டில் உயிரிழப்பு விகிதம் 10%-மாக குறைந்துள்ளது. எனவே, 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023ஆம் ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை இன்றுவரை 19.70% குறைந்துள்ளது. 2021ஆம் ஆண்டு கரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததால் விபத்துகள் குறைவாக நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், தவறான பக்கம் வாகனம் ஓட்டுதல், பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொள்ளுதல் போன்றவற்றிக்கு எதிராக சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்து காவல்துறை எடுத்து வருகிறது.
தொழில்நுட்ப முன்முயற்சிகளைப் பொறுத்தவரை போக்குவரத்து காவல்துறை 20 ஸ்பீட் ரேடார் அமைப்பு, வாகன இடைமறிப்பு அமைப்பு (Vehicle Interceptor System), ANPR கேமராக்கள் போன்றவற்றைக் கொண்டு வந்தது நடைமுறையில் பயன்படுத்தி வருகிறது.
மேலும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MORTH) ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (RAD) மூலம் GIS (Geographic Information System) வரைபடத்தைப் பயன்படுத்தி சென்னை நகரம் முழுவதும் 104 விபத்து தடங்களை GCTP கண்டறிந்து, சாலை உள்கட்டமைப்புகளை ரூபாய் 1 கோடி செலவில் மேம்படுத்தியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, சென்னையில் மற்றுமொரு முக்கிய குற்ற செய்தி நிகழ்ந்துள்ளது. டீசலை திருடிவிட்டதாகக் கூறி, ஓட்டுநர் உரிமத்தை பறித்துக்கொண்ட நிறுவனத்திடம் தனது ஓட்டுநர் உரிமத்தை கேட்டு அந்நிறுவனம் முன்பு தீக்குளித்த லாரி ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கடைய நல்லூரைச் சேர்ந்தவர், அருள் முத்துக்குமாரசாமி (33).
இவர் மண்ணடி தம்பு செட்டி தெருவில் அமைந்துள்ள 'ஈஸி வே லாஜிஸ்டிக்ஸ்' என்ற நிறுவனத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் கன்டெய்னர் லாரி ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2023ஆம் ஆண்டு ஜனவரியில் கண்டெய்னர் லாரியிலிருந்து சுமார் 160 லிட்டர் அளவு டீசலை அருள் முத்துக்குமாரசாமி திருடிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அருள் முத்துக்குமாரசாமியின் ஒரிஜினல் ஓட்டுநர் உரிமத்தை அந்நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 21) அருள் முத்துக்குமாரசாமி அந்த நிறுவனத்தில் கொடுத்த ஓட்டுநர் உரிமத்தை வாங்க வந்த போது, திருடிய டீசலுக்கு உண்டான பணத்தை கொடுத்துவிட்டு ஓட்டுநர் உரிமத்தை வாங்கி செல்லுமாறு அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென 5 லிட்டர் பெட்ரோலை எடுத்து வந்து அருள் முத்துக்குமாரசாமி தனக்கு தானே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். உடனடியாக அருகிலிருந்த நபர்கள் தீயை அணைத்து, அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு 50% தீக்காயங்களுடன் அருள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகள் தங்கி விட்டு ஹோட்டல் பில் கட்டாமல் தப்பிய நபர்... ரூ.58 லட்சம் அபேஸ்!