சென்னை மாநகர பேருந்துகள் தனது சேவையை நவீனமயமாகிவருகிறது. தற்போது பயணிகள் பேருந்து பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக இணையதளம் மேம்படுத்தப்பட்டு, தகவல்களை நிகழ் நேரத்தில் தெரிவிக்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட தட பேருந்துகள் எங்கு வருகிறது என செல்ஃபோன் செயலி, இணையதளத்தில் அறியும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக போக்குவரத்து கழக அலுவலர் ஒருவர் கூறுகையில்,"இது நீண்ட நாள்களாக திட்டமிடப்பட்டு வருகிறது. இடையில் கரோனா தொற்று காரணமாக தடைபட்டது, தற்போது மீண்டும் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
லைவ் டிராக்கிங்
பேருந்துகளை லைவ் டிராக்கிங் செய்ய ஜிபிஎஸ் பொருத்தும் பணி நடந்துவருகிறது. பொதுவாக மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது அவசியமில்லை. எனினும் நாங்கள் பயணிகளின் வசதிக்காக ஏற்கெனவே சில பேருந்துகளிஸ் ஜிபிஎஸ் பொருத்தியுள்ளோம். தற்போது மீதமுள்ள பேருந்துகளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. மேலும், சென்னை மாநகர பேக்குவரத்து கழகத்தின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டு, பேருந்து வழித்தட எண்கள், கட்டணம், நகருக்கு வரும் புதியவர்களுக்கு பேருந்து தடங்கள் குறித்து வழிகாட்டுதல் ஆகியவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேருந்து சேவை அதிகரிப்பு
ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டபோது வெறும் ஆயிரத்து 700 பேருந்துகள் மட்டும இயக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாயிரத்து 800 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. இதில், 20 லட்சம் மக்கள் பயணிக்கின்றனர். சென்னை மாநகர பேருக்குவரத்து கழக பேருந்துகளில் 60 விழுக்காடு அளவுக்கு பயன்பாடு அதிகரித்துள்ளது. 10, 12ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டபோதிலும், அதிக அளவு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாததால் பேருந்துகளில் கூட்டம் குறைவாகவே உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு பேருந்து: 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்