சென்னை மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனித் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் மாலா (10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு சிறுமி இயற்கை உபாதையைக் கழிக்க வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் சிறுமி வீட்டிற்குள் வராததால் பெற்றோர் வெளியே வந்து தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர் அந்தப் பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர்.
அப்போது, அருகில் உள்ள வீட்டின் பின்புறம் படுகாயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடிய நிலையில் மயங்கி கிடந்தார். இதைக் கண்ட காவல் துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, சிறுமியின் உடல் உடற்கூறாய்விற்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கி சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும், அப்போது சிறுமி சத்தம் போட்டதால் அவரை தாக்கி 3-வது மாடியிலிருந்து தூக்கி வீசிக் கொலை செய்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இயற்கை உபாதைக் கழிக்கச் சென்ற சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது.!