திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் சண்முகத்தை நேற்று நேரில் சந்தித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்படி, அரசிடம் உதவி கோரிய மக்களின் விண்ணப்பித்தை வழங்கச் சென்ற இந்தச் சந்திப்பு, சுமார் 15 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ஆர். பாலு, எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிவைத்த திமுக பிரதிநிதிகளுக்கு தலைமைச் செயலர் உரிய மரியாதை அளிக்கவில்லை என்றும், தங்களைத் தலைமைச் செயலர் அவமதித்துவிட்டார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்தக் குற்றச்சாட்டிற்கு தற்போது மறுப்பு தெரிவித்து தலைமைச் செயலர் சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”திமுகவையோ, எதிர்க்கட்சித் தலைவரையோ அவமதிக்கும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு திரித்துப் பேசுவதும், பத்திரிகைகளில் இதுகுறித்து செய்தி வெளியிடப்படுவதும் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
நான் ஒரு சாதாரண அரசு ஊழியன், அரசியல்வாதி அல்ல. மக்கள் பணியாற்றுவதுதான் என் வேலை. யாரையும் உதாசீனப்படுத்த நான் நினைத்தது இல்லை. 15 முதல் 20 நபர்கள் கட்டுகளுடன் எனது அறைக்குள் வந்தது சற்று அதிர்ச்சியாக இருந்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதித்து, நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறுவது பொய்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தலைமைச் செயலர் எங்களை அவமதித்துவிட்டார் -டி.ஆர். பாலு குற்றச்சாட்டு