சென்னையை சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, தானும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களும் வடபழனியில் வி-சாஃப்ட் லிங்க் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சந்திரசேகர் என்பவரிடம் ஃபோரெக்ஸ் டிரேடிங் (Forex Trading) செய்வதற்காக பணம் முதலீடு செய்து வந்ததாகவும், முதலீடு செய்த தொகைக்கு மாதாமாதம் சந்திரசேகர் மூலம் 5% முதல் 10% வரை ரிட்டன்ஸ் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஃபோரெக்ஸ் டிரேடிங் (Forex Trading)-ல் இருந்து முதலீட்டினை கிரிப்டோ கரன்சிக்கு மாற்றப்போவதாக தன்னிடம் சந்திரசேகர் கூறியதாகவும், அதனடிப்படையில் தான் 22 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய திட்டமிட்டு முதற்கட்டமாக அதில் 2 சதவீதம் தொகையான 41 லட்சம் ரூபாயை மட்டும் சந்திரசேகரன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்ததாகவும் புகாரில் கூறியுள்ளார்.

ஆனால் சந்திரசேகரன் தான் அளித்த 41 லட்சம் ரூபாய் பணத்திற்கான WT (Wohlstand Token) காயின் எண்களை மட்டுமே தனக்கு வழங்கியதாகவும், முதலீடு செய்ய அனுப்பிய பணத்தையோ, அதற்கான ரிட்டன்ஸ் தொகையையோ தராமல் தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக குறிப்பிட்டு, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சந்திரசேகரன் Wohlstand Token என்ற பெயரில் உள்ள கிரிப்டோ கரன்சியை, இணையதளம் ஒன்றைத் துவங்கி மற்ற முதலீட்டு இணையதளங்களிலும் தனது இணையதளத்தின் லிங்க்-ஐ பகிர்ந்து, அதன் மூலமாக சிறிய முதலீட்டாளர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள் வரை, பணம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

அதனடிப்படையில் வி-சாஃப்ட் லிங்க் நிறுவனத்தின் இயக்குனர்களுள் ஒருவரான சந்திரசேகரன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் wohlstand token எனப்படும் கிரிப்டோ கரன்சியின் விலை முன்பு உச்சத்தில் இருந்ததாகவும், ஆனால் தற்போது அதன் மதிப்பு வெகுவாக சரிந்து விட்டதால் முதலீடு செய்த பணம் அனைத்தும் நஷ்டம் அடைந்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Wohlstand token எனப்படும் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்தது தெரிந்தும் அதை மறைத்து தனது நிறுவனத்தைச் சேர்ந்த சக இயக்குனர்கள் தன்னை ஏமாற்றி பலரிடம் இருந்து முதலீட்டை பெற வைத்து மோசடி செய்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி சந்திரசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்திரசேகரனை சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுவெளியில் சிகரெட்.. இளைஞரிடம் ரூ.25000 பறிப்பு..! சிக்கிய ஊர்காவல் படை காவலர்