ராயப்பேட்டை முஹம்மத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அப்துல் கையூம். இவர் கொட்டிவாக்கத்தில் உள்ள எச்.டி.எஃப்.சி. வங்கியில் மேலாளராக பணியாற்றிவந்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை ராயப்பேட்டை ஜி.பி. சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக அதிவேகமாக வந்த லான்சர் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.
இதில் அப்துல் கையூமிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் அப்துல் கையூமை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துவிட்டு காரில் வந்தவர்களில் விஜயகுமார் என்பவரை பிடித்தனர். இதில் இரண்டு பேர் தப்பியோடியுள்ளனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாசாலை காவல் துறையினர் விஜயகுமாரை கைது செய்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விஜயகுமாருடன் காரில் வந்த நபர்கள் சரவணன், திலீப் குமார் என்பதும் மேலும் காரை ஓட்டிய விஜயகுமார் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் தப்பியோடிய திலீப்குமார், சரவணனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் அப்துல் கையூம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.