கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கி ஜன. 21ஆம் தேதி வரை நடைபெற்ற 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவுபெற்றது. இதில் சுமார் 13 லட்சம் வாசகர்கள் வருகைபுரிந்ததாகவும், கடந்த ஆண்டை விட அதிகமாக 20 விழுக்காடு வாசகர்கள் வந்ததாகவும் பபாசி தெரிவித்துள்ளது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் 800க்கும் அதிகமான ஸ்டால்களில் 20 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சிக்கு சென்னை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள ஏராளமான புத்தகப் பிரியர்கள் வந்திருந்தனர். கலை, அறிவியல், வரலாறு, இலக்கியம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்தகங்களும் சாதாரண இடங்களில் கிடைக்காத அரிய புத்தகங்களும் இங்கு குவிக்கப்பட்டிருந்தன. இதனால், பலரும் ஆர்வத்துடன் வந்து ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பல எழுத்தாளர்கள் தங்களது வாசகர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர்.
இந்தாண்டு நடந்த புத்தகக் கண்காட்சியில் அரசுக்கு எதிராக புத்தகம் விற்பனை செய்த கடையைக் காலி செய்தது, பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டது ஆகிய நிகழ்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு. வேங்கடேசன் இதனை மேடையிலேயே கண்டித்தார். பல எழுத்தாளர்கள் காரசாரமான விவாதங்களையும் அறிவுப்பூர்வமான கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்.