சென்னை: சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ஏராளமான வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
புத்தகக் காட்சியின் சிறப்புகள்: மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த புத்தகக் காட்சிக்கு ஒரு நாள் நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக, மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த புத்தகக் காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். தென்னிந்தியப் புத்த விஹார் அறக்கட்டளை, வாய்ஸ் ஆஃப் புத்தா, எழுச்சி பதிப்பகம், தடாகம், திருநங்கை, பிரஸ் LLP ஆகிய சிறப்பு வாய்ந்த அமைப்புகளுக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய எண்ம உலகில், புத்தகம், வாசிப்பு என்பதெல்லாம் வியக்கத்தக்க விஷயம் என்றாலும். புத்தகங்களுக்கு என்று தனி வாசகர் பட்டாளம் இருப்பது உண்மை தான். குறிப்பாக சென்னை புத்தக் காட்சியில், வரலாற்று நாவல்கள், சுயசரிதைகள், கிளாசிக் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் அதிக அளவி விற்பனை ஆகிறன.
குறிப்பாக காலம் காலமாக மீள் பதிப்பில் இருக்கும் நூல்களான பொன்னியின் செல்வன், யவன ராணி, கடல் புறா, சேரமான் காதலி, சில நேரங்களில் சில மனிதர்கள், மார்க்சியம் நூல்கள் பொதுவுடமை போன்ற நூல்கள் அதிக அளவில் மக்களை ஈர்த்துக் கொண்டு இருக்கிறது.
முறையான வசதி இல்லை: சென்னை புத்தக காட்சிக்கு அதிக அளவு மக்கள் தினமும் வருகை புரிகின்றனர். இருப்பினும் அடிப்படை வசதிகள் முறையாக செய்யபடவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.இது குறித்து வாசகர்கள் கூறுகையில், "2023 புத்தகக் காட்சியில் அரங்குகளின் எண்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்த விதம், குறிப்பிட்ட அரங்கைத் தேடிச் செல்வதில் அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தாண்டும் இதேப் போல் தான் உள்ளன.
ஆனாலும் நாங்கள், புத்தகங்களுக்காக தான் வருகிறோம். மேலும், சரியான வழிக்காட்டி பலகைகள் போன்றவை இல்லை. குறிப்பாக, மக்கள் புத்தக் காட்சியில் அமர இடமும் இல்லை. வயதானவர்கள் வரும் போது அவர்கள் சிறிது அமர்வதற்கு நாற்காலிகல் கொடுக்கலாம்.
ஆனால், பலப்பேர் தரையில் தான் அமர்ந்துள்ளனர். புத்தக விற்பனை பலசரக்கு வியாபாரம் அல்ல, அதன் நோக்கம் விற்பனை மட்டும் கிடையாது. எனவே, வாசிப்புப் பண்பாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் எல்லா முன்னெடுப்புகளையும் பபாசி மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்கள்.
பாபசி என்பது ஒரு தனியார் அமைப்பு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்கள் புத்தகக் காட்சியை நடத்தும் வேளையில் சென்னையில் மட்டும் பாபசி என்ற தனியார் அமைப்பு புத்தகக் காட்சியை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு விலை அதிகம்: புத்தகக் காட்சியில், புத்தகம் மட்டுமே நமக்கு மலிவாக கிடைக்கிறது. ஆனால் அடிப்படையான தேநீர், தண்ணீர் போன்றவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. புத்தகக் காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கு கழிவறைகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்றவை அடிப்படை வசதிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
அதேபோல் சரியான முன்னேற்பாடுகள் இல்லை. சில தனியார் அரங்குகளை பபாசி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அரசு சார்ந்த பதிப்பங்களுக்கும், பபாசி நிர்வாகி அரங்குகளுக்கு மட்டும் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருவதாக, பிற பதிப்பக உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; 17 காளைகளை அடக்கிய கார்த்திக் முதலிடம்!