சென்னை: தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) சார்பாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 44 ஆவது புத்தகக் கண்காட்சி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்கக் காட்சியில் புத்தகங்களை காட்சிப்படுத்த சுமார் 700 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் புத்தகக் காட்சி இந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள அனைத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும் என பபாசி குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், "புத்தகக் கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தொடங்கி வைக்கிறார். இந்த ஆண்டும் வழக்கம் போல அனுமதி கட்டணம் ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படும். மேலும், இந்த ஆண்டு வாசிப்பை வளர்க்கும் விதமாக குழந்தைகளுக்கு கதை சொல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்க உள்ளனர்.
புத்தகக் காட்சியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் பெசண்ட் நகர் கடற்கரை மாதா கோவில் அருகில் 'ரன் டூ ரீட்' ( Run to Read) என்னும் பெயரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன் தொடங்கி வைக்கிறார்.
பிரபலத் தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அவர் வாசிக்க பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அறையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் கமல் ஹாசன் தினமும் ட்விட்டர் மூலம் சில புத்தகங்களை மக்களிடையே அறிமுகம் செய்ய உள்ளார். அந்த புத்தகமும் இந்த அறையில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு சுமார் 700 புத்தக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு தமிழ்நாடு அரசு 75 லட்சம் ரூபாய் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அது புத்தகக் கண்காட்சிக்கு கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.