மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜானி- ரந்து போஸ்லே தம்பதி. இவர்களுக்கு ஜான் என்ற எட்டு மாத ஆண்குழந்தை உள்ளது. இவர்கள் சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். மெரினா கடற்கரையில் இவர்கள் வசிக்கும் பகுதியில் அடிக்கடி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி மாலை அந்தப் பெண் ரந்துவிடம் உங்கள் குழந்தை மிகவும் அழகாகவுள்ளது என்றும், சினிமா படப்பிடிப்பில் குழந்தையை நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய ரந்து குழந்தையை நடிக்க வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் அந்தப் பெண் குழந்தைக்கு தோல் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ரந்து, அவரது மாமியார், குழந்தை ஜான் ஆகியோருடன் சென்றுள்ளார். ஆனால், அங்கு குழந்தையை கடத்தி கொண்டு தப்பியோட வாய்ப்பில்லை எனத் தெரிந்து கொண்டு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்றவுடன் குழந்தைக்கு ஆடை மாற்றி தோல் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி ரந்து, அவரது மாமியாரை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு குழந்தையுடன் அந்தப் பெண் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் திரும்பி வராததால் சந்தேகமடைந்த ரந்து போஸ்லே மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், காவல் துறையினர் மருத்துவமனையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்தப் பெண்ணை வலை வீசித் தேடி வந்தனர்.
குழந்தை கடத்தப்பட்டு எட்டு நாள்கள் ஆகிய நிலையில் குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் காவல் துறையினர் கடத்திய பெண்ணின் சிசிடிவி காட்சி, புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை நாடினர். இந்நிலையில், இன்று 8 மாத ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அருகே குழந்தையுடன் தனிப்படை காவல் துறையினர் கைது செய்து பூக்கடை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை கடத்திய பெண் சென்னை மேற்கு சைதாப்பேட்டை மேட்டுப்பாளையம் தெருவைச் சேர்ந்த ரேவதி (26) என்பது தெரியவந்தது.
குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது கையும் களவுமாக சிக்கியது தெரியவந்துள்ளது. மேலும் குழந்தையை கடத்தியதற்கான காரணம் குறித்தும், இதே போன்று வேறு குழந்தைகளை ரேவதி கடத்தியுள்ளாரா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
காட்பாடி அருகே ரூ.3 லட்சம் திருட்டு: மருத்துவர் வீட்டில் கைவரிசை