சென்னை ஆவடி மாநகர காவல் ஆணையரக எல்லைக்கு உள்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி, கொரட்டூர், ஆவின் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் செல்போன் பறிப்பு நடைபெற்று வந்தது. இது தொடர்பாக காவல் நிலையங்களுக்கு தினந்தோறும் புகார்கள் வந்தபடியும் இருந்தன.
இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த அருண்குமார், செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு பணி முடிந்து பட்டரைவாக்கம் ரயில் நிலையத்திலிருந்து ஆவின் பால்பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாத புதிய டியோ ஸ்கூட்டர் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டு இருவர் வந்துள்ளனர். அவர்கள் அருண் குமாரிடம் டைம் கேட்பது போல் இரு சக்கர வாகனத்தினை மெதுவாக ஓட்டி வந்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அருண்குமாரிடம் கையில் இருந்த செல்போனை பிடுங்கிக்கொண்டு தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதைக் கண்டதும் அவ்வழியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் துரத்திச் சென்று அவ்விருவரையும் பிடித்துள்ளனர். அப்போது குற்றவாளிகள் வலிப்பு நோய் வந்தவர்கள் போல் நடித்து பொது மக்களிடம் ஏமாற்றி தப்பிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.
இது நடிப்பு என்பதை உண்ர்ந்த பொதுமக்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்துள்ளனர். இதே இடத்தில் பணிமுடிந்து வீடு திரும்பிகொண்டிருந்த வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சௌந்தரவல்லி குற்றவாளிகளை பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கொரட்டூர் போலீசார் இருவரையும் பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருவள்ளுவரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் ரத்த காயங்களுடன் இருந்த இருவரையும் போலீசார் முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த தீவிர விசாரணையில் போன் பறிப்பில் ஈடுபட்டது பாடி குப்பத்தை சேர்ந்த நவீன் (18), ரியாஸ் (18) ஆகியோர் எனத் தெரிய வந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உணவு வாங்க பணம் கேட்ட ஆறு வயது சிறுவனை அடித்து கொன்ற காவலர்