சென்னை பல்லாவரத்தில் உதவி காவல் ஆணையராக பணிபுரிந்தவர் ஈஸ்வரன்(52). இவர் கொடுங்கையூர், வியாசர்பாடி, வேப்பேரி காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார். வேப்பேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது தேர்தல் பணிக்காக பல்லாவரம் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சட்டபேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென கடந்த 30ஆம் தேதி ஈஸ்வரனுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை செய்து கொள்ள உயரலுவலர் ஒருவரிடம் அவர் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் இரண்டு நாள்களே உள்ளதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கரோனா பாசிட்டிவ் என்று வந்தால் பாதுகாப்பு பணியில் யார் ஈடுபடுவது எனக் கூறி உயர் அலுவலர் தடுத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து இரண்டு நாள்கள் கடும் காய்ச்சலுடன் ஈஸ்வரன் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். மே 3ஆம் தேதி கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்தபோது நுரையீரல் பாதிக்கப்பட்டு, தொற்று உறுதியானது.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரன் இன்று மூச்சுதிணறல் அதிகமாகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: திட்டங்களை செயல்படுத்தும் அரசு திமுக: கனிமொழி எம்.பி.,