நமக்கு பட்டு சேலை தெரியும், பருத்தி சேலை தெரியும் ஆனால் வாழை நார் சேலை, தேங்காய் நார் சேலை, மூங்கில் நார் சேலை, அன்னாசி பழம் என 25 இயற்கை பொருட்களிலிருந்து கிடைக்கும் நார்களிலிருந்து நெய்யப்படும் சேலைகள் தெரியுமா? ஆம், செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூரில் இயற்கைப் பொருள்கள் கொண்டு ஆடைகள் நெசவு செய்யப்படுகிறது.
கழிவாக கருதி ஒதுக்கும் பொருட்களில் இருந்து நாரெடுத்து காய்கறி, பழங்கள் பட்டைகளில் வண்ணங்கள் எடுத்து உருவாக்கப்படும் இவ்வகை சேலைகளை தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் கடந்த 15 வருடங்களாக இயற்கை நார் நெசவுக் குழுமும் உருவாக்கப்பட்டு வாழை, மூங்கில், கற்றாழை, பைனாப்பிள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட இயற்கை நார்களின் இழைகளைக் கொண்டு பலவண்ண சேலைகளை தயாரிக்கும் நெசவுத் தொழிலில் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகிறார்.
சேலைகளுக்கான வண்ணங்களை உருவாக்குவதற்கு வேப்பிலை, மஞ்சள், சந்தனம், சுண்ணாம்பு, கரி, பழங்கள், காய்கறிகள், பட்டைகளில் இருந்து வண்ணங்கள் உருவாக்கி அதனை நார்களில் ஊறவைத்து பல வண்ணங்களில் சேலைகளை நெய்து வருகின்றனர். இந்த வகை சேலைகளில் எந்த வகை ரசாயனமும் சேர்க்கப்படாததால் இது உடம்புக்கு மிகவும் குளிர்ச்சியையும் தருகின்றன. அது மட்டுமல்லாமல் மூலிகை நார்களில் நெய்கிற சேலைகள் தோல் நோய்களையும் குணப்படுத்தும் என்கின்றனர்.
இயற்கை நார்களில் இருந்து நெய்யப்படும் சேவைகளுக்காக பல சான்றிதழ்களையும் அனகாபுத்தூர் நெசவாளர்கள் பெற்றுள்ளனர். தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இந்தியாவிலேயே முதன்முதலாக வாழை நாரில் சேலை நெய்ததற்காக சான்றிதழ், பதக்கங்களை பெற்றுள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து கிடைக்கும் நார்களில் சேலை மட்டுமல்லாமல் சட்டை, சுடிதார் போன்றவைகளையும் நெய்து வருகிறார்கள் இந்த நெசவாளர்கள்.
அனகாபுத்தூர் பகுதியில் 80க்கும் மேற்பட்டோர் இயற்கை நார் நெசவாளர் குழுமத்தில் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை இழைகளில் இருந்து எடுக்கப்பட்டு நாரால் நெய்யப்படும் ஒரு சேலையை செய்வதற்கு சுமார் மூன்று நாட்கள் ஆகுமாம். இயற்கை நார்களால் செய்யப்படும் சேலைகளின் விலை 1,200 முதல் 7,500 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றன.
மேலும், இதன்மூலம் மாதம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருவதோடு, போதிய இடவசதி இல்லாமல் தொழிலை மேம்படுத்த முடியாமல் இருக்கின்றனர். இவ்வகை சேலைகளுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பு உள்ளது இருப்பினும் மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் கிடைக்காததால் இத்தொழிலை பெரிய தொழிலாக மாற்ற இயலவில்லை என்றும், அதேசமயம் தற்போது கரோனா தொற்று ஊரடங்கால் மிகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அரசு அறிவித்த எந்த நிவாரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர் இந்த நெசவாளர்கள்.
எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு மானியங்கள் வழங்கி இட வசதிகள் செய்து கொடுத்தால் எங்களது இயற்கை இழை நெசவு தொழிலை மேம்படுத்தவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் முடியும் என இயற்கை நார் நெசவாளர் குழும தலைவர் சேகர் கோரிக்கை வைக்கின்றார்.
இதுகுறித்து இயற்கை நார் நெசவாளர் குழுமத் தலைவர் சேகர் கூறுகையில்:-
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அனகாபுத்தூர் பகுதியில் மூன்றாயிரம் தறிகள் செயல்பட்டு வந்தன. தற்போது 100 தறிகள் மட்டுமே உள்ளன. இதற்கு காரணம் போதுமான வருமானமும் மத்திய, மாநில அரசுகளின் உதவிகள் கிடைக்காததால் பலபேர் இத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
நான் கடந்த 30 ஆண்டுகளாக நெசவுத்தொழில் உள்ளேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு, செங்கல்பட்டு மாவட்டத்தில் தான் இயற்கை நார்களில் இருந்து உருவாக்கப்படும் கைத்தறி நெசவு சேலைகள் உருவாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வட மாநிலங்களுக்கும் சென்று அங்கு உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு இயற்கை நார்களைக் கொண்டு எப்படி நெசவு செய்வது என்று பயிற்சிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.
எங்களுக்குப் போதுமான இட வசதிகள் இல்லாததால் இத்தொழிலை மேம்படுத்த முடியவில்லை கைத்தறி தொகுப்பு (handloom cluster) நிலையத்தை அமைக்க முடியவில்லை சிறு, குறு தொழில் திட்டத்தின் மூலம் மத்திய அரசு எங்களுக்கு கடனுதவி அளிக்க தயாராக உள்ளது. நெசவு செய்வதற்கான சாதனங்களையும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளது ஆனால் எங்களுக்கு இடவசதி இல்லாமல் அனைத்தும் தடைப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும், பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் பெருக இத்திட்டம் நல்ல வாய்ப்பாக இருக்கும் நாளொன்றுக்கு பெண்கள் 300 முதல் 400 ரூபாய் வரை இதில் வருமானம் ஈட்ட இத்தொழில் வழிவகுக்கும்.
இயற்கை நார்களில் இருந்து நெய்யப்படும் சேலைகள் வாங்க உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து பல ஆர்டர்கள் வருகின்றன. இந்த ஆர்டர்களை தயார் செய்ய போதிய இடவசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். நாங்கள் கடந்த 2015ஆம் ஆண்டு வந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மீண்டு தற்போது நெசவுத் தொழில் செய்து வருகிறோம்.
தற்போது கரோனா தொற்றால் ஆறு மாதங்களாக மிகவும் பாதிப்படைந்து உள்ளோம். ஊரடங்கால் விற்பனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு விட்டது எங்களால் மூலப்பொருட்கள் சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. மாநில அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் இதுவரையும் எங்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை.
இயற்கை நார்களைக் கொண்டு நெசவுத் தொழிலில் ஈடுபடும் எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நெசவாளர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். இதன்மூலம் எங்களது வாழ்வாதாரம் மேம்படுத்த முடியும், இத்தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். பல இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை கொடுக்க முடியும்.
இதுதொடர்பாக கடந்த எட்டு ஆண்டுகளாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம், தற்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம். இதற்கான நடவடிக்கையை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளில் மூங்கில் நார்களால் ஆறு மீட்டர் அளவு சேலையை நெய்து அதனுடன் கோரிக்கை மனுக்களையும் பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளனர். இதன் மூலம் நெசவாளர்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகின்றனர்.