சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று தற்போது இந்தியாவில் தனது கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின. இதனால் நாடு முழுவதும் அனைத்து வகையான போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டின. இதனால் மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டது இதனால் பல விமான நிலையங்கள் பரபரப்பு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவர மத்திய அரசு வந்தே பாரத் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு சென்னை விமான நிலையத்திலேயே காரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனியார் கல்லூரிகள், தனியார் விடுதிகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த கார்கோ விமானங்களில் மருத்துவ உபகரணங்கள், அதிநவீன முகக்கவசங்கள், வென்ட்டிலேட்டர்கள் போன்றவை கொண்டுவரப்பட்டன.
இதையடுத்து இரண்டு மாதங்கள் விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் சென்னை உள்நாட்டு விமான சேவையை தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.
விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வந்த நிலையில் தனியார் விமான நிறுவனத்தின் கோரிக்கைகளை ஏற்று பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு உத்தரவிட்டது.
உள்நாட்டு விமான சேவைக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு தினமும் 25 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.
பாதுகாப்பாக பயணிகள் பயணிக்க விமான நிலையம் முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு பயணிகள் தங்கள் கைகளை சுத்தப்படுத்த சானிடைசர் உள்ளிட்டவை விமான நிலையத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டன. மேலும், பயணிகளின் பாதுகாப்புக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தகுந்த இடைவெளியை பின்பற்ற விமானங்களில் இருக்கைகளும் குறைக்கப்பட்டன. மூன்று பேர் அமரும் இருக்கையில் இரண்டு பேர் மட்டுமே அமரவும் அதேபோல் இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் கரோனா அச்சம் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு பின்பு சென்னையில் விமான சேவை தொடங்கியது. முதல்கட்டமாக சென்னையிலிருந்து டெல்லி, பெங்களூர், கொச்சி, வாரணாசி, திருவனந்தபுரம், மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் சென்னையிலிருந்து அதிகப்படியான பயணிகள் விமானம் மூலம் வெளியேறுகின்றனர். மேலும், சென்னைக்கு வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையும் அதிக அளவில் குறைந்துள்ளது.
விமானத்தில் பயணம் செய்த பயணிகள், தற்போது எந்த ஒரு உணவகமும் திறக்கப்படததால் தண்ணீர், உணவுகள் விமான நிலையத்தில் கிடைக்கவில்லை என புலம்புகின்றனர். மேலும், விமான நிலையத்தில் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இதையும் படிங்க: கரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து கவிதை வெளியிட்ட அமைச்சர் விஜய பாஸ்கர்!