சென்னை: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயந்தன் (29). இவர் சென்னை நங்கநல்லூர் என்.ஜி.ஒ. சாலையில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி, கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயந்தன் கடந்த மார்ச் 18ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, பணி முடிந்ததும் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு போய்விட்டுதான் வருவேன் என்று சகோதரியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், சில நாட்கள் ஆகியும் ஜெயந்தன் திரும்பி வரவில்லை. அவருடைய சகோதரி ஜெயந்தனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஜெயந்தனை காணவில்லை என்று அவரது சகோதரி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் ஜெயந்தனின் செல்போன் சிக்னல் போன்றவற்றை வைத்து ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக புதுக்கோட்டையைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(38) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1ஆம் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த பெண் முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
பிறகு போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. ஜெயந்தனை புதுக்கோட்டையில் வைத்து கொலை செய்து, உடலை துண்டு துண்டாக கூறு போட்டு, கட்டைப் பை, சூட்கேஸ் ஆகியவற்றில் எடுத்துச் சென்று, செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரை அருகே குழி தோண்டி புதைத்துவிட்டதாக அந்தப் பெண்மணி கூறியுள்ளார். மேலும், தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த தன்னை ஜெயந்தன் தாம்பரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் முதல் முறையாக சந்தித்ததாகவும், பின்னர் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2020ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், மயிலம் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டில் தான் ஜெயந்தனை விட்டு பிரிந்துவிட்டதாகவும், கடந்த மாதம் 19ஆம் தேதி ஜெயந்தன் மீண்டும் தன்னை பார்க்க வந்தபோது தகராறு செய்ததால், கொலை செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் பாக்கியலட்சுமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பழவந்தாங்கல் போலீசார் பாக்கியலட்சுமியை பெண் போலீசார் உதவியுடன் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஜெயந்தன் உடலை கோவளம் கடற்கரையில் புதைத்த இடத்தை அடையாளம் காட்டுவதாக கூறினார். அதன்படி, கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருப்போரூர் தாசில்தார், செங்கல்பட்டு அரசு மருத்துவர் முன்னிலையில் பாக்கியலட்சுமி அடையாளம் காட்டும் இடத்தில் உடலை தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜெயந்தன் கொலை நடந்த இடம் புதுக்கோட்டை மாவட்டம், என்பதால் அம்மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலைக் கைப்பற்றிய பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பாக்கியலட்சுமியை தன்னுடன் வரும்படி ஜெயந்தன் அழைத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது பாக்கியலட்சுமி ஜெயந்தனை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்ட கணவர் - அதிர்ச்சி சம்பவம்!