சீன அதிபர் ஷி ஜின்பிங் மூன்று நாள் அரசு முறை பயணமாக வருகின்ற 11ஆம் தேதி சென்னை வருகிறார். சீன அதிபர் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து, மகாபலிபுரம் வரை செல்லும் பாதையில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்துக்கு வரும் 11ஆம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங் வந்து இறங்கும் போது விமான நிலையத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம், இசை உள்ளிட்ட வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கான 5, 6ஆவது நுழைவு வாயிலை பயன்படுத்தவும், அதற்கான வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக அந்தப் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. விமான நிலையச் சுவர்களில் இந்திய - சீன கலாசார ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மீனம்பாக்கம் விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் அருகே சாலையோர புதியப் பூங்கா ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர்.
சீன அதிபர் விமானம் சென்னையில் தரையிறங்கும் தினமும், 13ஆம் தேதி அவர் புறப்படும் போதும் சுமார் 30 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு, வழியனுப்பும் நிகழ்ச்சிகள், சரக்கு விமானங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் விமானத்திற்காக தடை விதிக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய, வர வேண்டிய விமானங்களின் நேரங்களை மாற்றி அமைத்து பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாமல்லபுரம், சீனா, போதி தர்மர் - இந்த காரணிகளுக்குள் இருக்கும் பிணைப்பு என்ன?