சென்னை: ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை என்றால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பிவிடும். இதனால் நீர்நிலைகள் நம்பி விவசாயம் செய்யும் அனைத்து மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால், ஒரு புறம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வடகிழக்கு பருவ மழை என்றாலே சென்னை வாசிகளுக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தி விடும்.
ஏனென்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெருவெள்ளம் உருவாகி சென்னைவாசிகள் உணவின்றி, நீரின்றி, மின்சாரம் இன்றி,கண்ணீரோடு பெருவெள்ளத்தில் மிதந்ததே இதற்க்கு காரணம். சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கும் அடையாற்று வெள்ளப்பெருக்கால் முடிச்சூர்,மணிமங்கலம், பரத்வாஜ் நகர், ராயப்பா நகர்,பி டி சி கோட்ரஸ், லட்சுமி நகர், பழைய பெருங்களத்தூர், அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்கள் வடகிழக்கு பருவ மழையின் போது வெள்ளத்தில் மூழ்கின.
இதனால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் பறிபோனதோடு பெரும் அளவு உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அப்போது கடும் மழையினால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் முன்னறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏறி திறந்து விடப்பட்டதால் அடையாறு ஆறு முறையாக தூர்வாரப்படாமல், கரைகள் பலப்படுத்தபடாமல் இருந்தால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது.
இது சென்னைவாசிகளின் மறக்க முடியாத சம்பவமாக இன்றளவும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் அடையாறு ஆற்றை சுற்றியுள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் முறையாக சென்று அடையாற்றில் கலக்க கால்வாய்கள் இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக புகுந்து அடுக்குமாடி கட்டிடங்களை முழுக செய்து பெருமளவில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே வடகிழக்கு பருவ மழை என்றாலே சென்னை வாசிகளுக்கு ஒரு வித பயம் ஏற்பட்டுவிடும். அதன் பின்பு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் பகுதியில் தொடங்கும் அடையாறு ஆறு ,காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகள் வழியாக சென்னை அடையாறு அருகே கடலில் கலக்கும் இந்த அடையாறு ஆற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி புணரமைத்து வந்தனர்.
ஆனால், என்னதான் அடையாறு ஆற்றை வருடம் வருடம் தூர் வாரினாலும் வருடம் வருடம் வடகிழக்கு பருவம் மழையின் போது ஆற்றங்கரை சுற்றியுள்ள முடிச்சூர், ராயப்பா நகர்,பரத்வாஜ் நகர், பிடிசி கோட்ரஸ், மணிமங்கலம், லட்சுமி நகர்,பழைய பெருங்களத்தூர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இதனால் பல வருடங்களாக தங்களை வடகிழக்கு பருவ மழை வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்றுமாறு தமிழக அரசுக்கு நெடுநாள் கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் வைத்து வருகின்றனர். இதனால் இம்முறை வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை அடையாறு ஆற்றில் பொதுப்பணி துறையினர் எடுத்துள்ளனர்.
அடையாறு ஆற்றில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறியதாவது. “அடையாறு கரையோரம் உள்ள பகுதி குடியிருப்புகளில் வெள்ளம் புகாமல் இருக்க ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் அடையாறு ஆற்றின் கறைகள் முன்பு இருந்ததை விட தற்போது உயரமாக்கப்பட்டுள்ளது. அடையாறு ஆறு குறுகிய இடங்களில் ஆழமாக தூர்வாரப்பட்டு அகலமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கரையில் பலம் இல்லாத பகுதிகளில் ஆங்காங்கே சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாங்கு சுவர் அமைக்கப்பட்ட உள்ளது. சோமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகளில் நிரம்பி வெளியேறும் உபரி நீரை குடியிருப்புக்குள் புகுந்து விடுவதை தவிர்த்து உபரி நீரை நேரடியாக அடையாறு ஆற்றில் கலக்கும் விதமாக சோமங்கலத்தில் இருந்து அடையாறு ஆறு வரை 1562 மீட்டர் தூரத்திற்கு 34 கோடி மதிப்பீட்டில் கட் அண் கவர் மூடு கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகளவு பெய்தாலும் 12 ஆயிரம் கனஅடி நீர் செல்லும் அளவிற்கு புனரமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முறை 12ஆயிரம் கன அடி நீர் செல்லும் போது ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்படும்” என்றார்.
இதனிடையே அடையாறு ஆற்றை சுற்றியுள்ள நீர்நிலைகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் நேரடியாக அடையாற்றில் கலக்கிறது. இந்த நீர் எந்தவித பயனும் இன்றி நேரடியாக கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் சந்தானம் கூறுகையில், “தென் சென்னை பகுதிகளில் பல ஏரிகள் நீர்நிலைகள் உள்ளது இதனை அரசு புனரமைத்து, ஆழப்படுத்தி ஏரிகளை சீரமைக்க வேண்டும்.இதன் மூலம் பருவ மழையின் போது செம்பரம்பாக்கம், சோமங்கலம் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீரை அடையாற்றில் கலக்காமல் மற்ற தென் சென்னையில் உள்ள ஏரிகள்,நீர் நிலைகளில் கலப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடையாறு ஆற்றை சுற்றி நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் நேரடியாக அடையாற்றில் கலந்து கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது அதற்கு மாற்றாக மற்ற ஏரிகளுக்கு சென்றடையும் படி நடவடிக்கை எடுத்து மழை நீரை சேமிக்க வேண்டும்.
இதனால் மழைக்கால முடிந்து கோடைகாலங்களில் சென்னைவாசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளையும் புனரமைத்து, தூர்வாரப்பட்டு மழை நீரை சேமித்து நீர்த்தேக்கங்களை உருவாக்க ஏன் எந்த அரசும் முன்வரவில்லை அரசு நிதி ஒதுக்கீடு செய்து சென்னையில் உள்ள ஏரிகளில் நீரை சேமிக்க வேண்டும்.
அடையாறு ஆற்றை பொதுபனித்துறை அதிகாரிகள் சீரமைத்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் தற்போது சென்னையில் இரண்டு நாட்கள் மட்டுமே கன மழை பெய்துள்ளது. இந்த கனமழை தொடருமானால் அடையாறு ஆறு தாங்குமா அல்லது பாதிப்புக்குள்ளாகும் என்பது பொறுத்திருந்துதான் தெரியும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 17 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு வார்னிங் - வானிலை ஆய்வு மையம்!