சென்னை அடுத்த புழல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன், அவரது மனைவி குட்டி அம்மாள் இருவரும் உறவினர் திருமணத்துக்காக இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் சென்றுள்ளனர்.
அப்போது குட்டி அம்மாளுக்குத் தொலைபேசியில் அழைப்புவந்ததால், இருசக்கர வாகனத்தை பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை மேம்பாலம் அருகே நிறுத்திவிட்டு அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பல்சர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் குட்டி அம்மாளின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்தவர் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். மற்றொருவர் வாகனத்தை ஓட்டிக்கொண்டு தப்பியோடினார். அதைத் தொடர்ந்து பிடிபட்ட இளைஞரை பல்லாவரம் காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்ததில் அவர் திரிசூலம் பகுதியைச் சேர்ந்த மங்கோஸ் (எ) விட்டல் பாண்டுரங்கன் (19) எனத் தெரியவந்தது. மேலும் இருவரும் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், பத்தாம் வகுப்பிலிருந்து பாதியில் நின்றுவிட்டு கோயம்புத்தூரில் ஒரு தனியார் உணவகத்தில் வேலை பார்த்ததும் தெரியவந்தது.கரோனா ஊரடங்கு போடப்பட்டதால் சென்னைக்கு வந்ததாகவும் தற்போது ஊரடங்கு உத்தரவால் இங்கும் வேலை இல்லாமல் கையில் பணம் இல்லாததால் தனது கூட்டாளியான மீனம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டனை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்போன் திருடியதாக வாக்குமூலம் அளித்தார். கைப்பற்றப்பட்ட செல்போன்கள் செல்போன் திருடி அதை விற்று அதில் வரும் பணத்தில் இருவரும் உல்லாசமாக இருக்க நினைத்ததாகவும் அதனால் மீனம்பாக்கம், பல்லாவரம் சாலைகளில் செல்போனை பறித்ததாகவும் மூன்றாவது இடத்தில் பறிக்க முயன்றபோதுதான் சிக்கியதாகவும் மங்கோஸ் காவல் துறையினரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து மணிகண்டனைத் தேடிவருகின்றனர்.