சென்னை: அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம்.. கடல்மேல் சிவப்பு கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடி பெயர்வோம் என்ற வைரமுத்துவின் வரிகளை கேட்டால் அது சரிதான் அனால் அதற்கு பணம் வேண்டுமே என்ற மன நிலைதான் காதலர்களுக்கு வரும். ஆனால் சென்னை ஓட்டேரி பட்டாளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பணத்தை பற்றி எதற்கு கவலை என்ற தொனியில், தனது வீட்டுக்கு சொந்தமான நகை கடையிலேயே ஒரு கிலோ தங்கம் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணத்தை திருடி தலைமறைவான நிலையில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
சென்னை ஓட்டேரி பட்டாளம் பகுதியை வினோத் ஜெயின் சேர்ந்தவர். இவருக்கு நரேந்தர் ஜெயின் மற்றும் யோகேஷ் ஜெயின் என்ற இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மற்றும் இவர்களின் பெற்றோர் என அனைவரும் இணைந்து சென்னை, சவுகார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆர்.என் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
வட இந்தியாவை சேர்ந்த இந்த குடும்பத்தினர் தொழிலின் நிமித்தமாக சென்னைக்கு குடியேறி பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தொழில் நல்ல முறையில் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல், கடந்த 3 ஆம் தேதி காலையில் யோகேஷ் ஜெயின் தனது கடையை திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைக்கப்பட்டிருந்த 1 கிலோ தங்கம் மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த யோகேஷ் ஜெயின், முதலில் யானைக்கவுனி காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து தனது வீட்டிற்கும் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் குடும்பத்தினர் மீது துளியும் சந்தேகம் கொள்ளாத யோகேஷ் ஜெயின், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவரின் கடைக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்துள்ளனர்.
அதில் யோகிஷின் சகோதரர் வினோத் நகைக்கடைக்கு வருவதும், நகையை திருடிச்செல்வதும் பதிவாகியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சகோதரர் வினோத் மீது புகார் அளித்து நகையை மீட்டுதர காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், வினோத்தின் செல்ஃபோன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஃபோன் ஸ்விச் ஆஃபில் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவரின் செல்ஃபோன் வழித்தடத்தை ட்ரேக் செய்த போலீஸார் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வைத்து பெண் ஒருவருடன் சாலையில் ஜாலியாக வலம் வந்த வினோத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் திருமணம் ஆன பெண் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் ஊர் சுற்ற பணம் தேவை என்பதால் நகைக்கடையில் இருந்து பணத்தை திருடி வந்ததாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த 1 கிலோ தங்கம் மற்றும் 3 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், வினோத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குன்னூரில் கரடிகள் நடமாட்டம்:கூண்டு வைத்துப் பிடிக்க கோரிக்கை