இது குறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, "கரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்கிட பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
செங்கல்பட்டு அருகேயுள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி நிறுவனத்திலும் கரோனா தடுப்பூசியை மத்திய அரசு உடனடியாக உற்பத்தி செய்திட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். இந்நிலையில் மத்திய அரசு அங்கு நேரடியாக உற்பத்தி செய்யத் தயங்குவதுடன், அந்நிறுவனத்தில் தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்ய ஒப்பந்தப் புள்ளிகளையும் கோரியுள்ளது.
மத்திய அரசு அங்கு நேரடியாக உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்காததாலும், தனியாருக்கு அதை வழங்கிட மத்திய அரசு முயல்வதாலும், அந்நிறுவனத்தை தமிழ்நாடு அரசே ஏற்று கரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்திட வேண்டும் என்று கோரி வந்தோம்.
இந்நிலையில், முதலமைச்சர் நேற்று (மே.26) அந்நிறுவனத்திற்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டது வரவேற்புக்குரியது. மத்திய அரசு அங்கு உற்பத்தியைத் தொடங்கிட வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளை வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசு அத்தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்கிடவில்லை. அதை தனியாருக்குத் தாரை வார்க்கவும் முயன்று வருகிறது.
கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கடும் தடுப்பூசித் தட்டுபாடு நிலவுகிறது. இந்நிலையிலும் கூட மத்திய அரசு அந்நிறுவனத்தில் உற்பத்தி செய்ய முன்வராமல் தனியாருக்கு வழங்கிட ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது வருந்தத்தக்கது.
வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் (ஃபைசர், மாடர்னா) மாநில அரசுகளுடன் தடுப்பூசி வழங்க ஒப்பந்தம் செய்ய மறுத்துள்ளன. உலகளாவிய தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும்போது தமிழ்நாட்டுக்கு தடுப்பூசி உடனடியாகவும் தடையின்றியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எனவே, எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி நிறுவனத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த முன் வரவேண்டும். இதன் மூலம் தமிழ்நாடு மக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளை குறைந்து விலையில் நாம் பெற முடியும். வர்த்தக ரீதியில் வேறு மாநிலங்களுக்கும் வழங்கிட முடியும். கரோனா தடுப்பூசியைத் தவிர வேறு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்திட முடியும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திட முடியும். அரசுக்கு இந்நிறுவனத்தின் மூலம் நிரந்தர வருவாய் கிடைத்திடவும் வழி வகுக்கும்.
ஏற்கனவே , மகாராஷ்டிரா அரசுக்குச் சொந்தமான, மும்பை ஹாஃப்க்கைன் நிறுவனத்தில் ( Haffkine Institute ) தடுப்பூசி உற்பத்தி செய்திட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசே அந்நிறுவனத்தை ஏற்று நடத்திட வேண்டும்" என்றார்.