தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.
அப்போது கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் காரசார விவாதம் நடந்தது.
“கோடநாடு விவகாரம் என்பது சாதாரண விஷயமில்லை. உங்கள் தலைவர் (ஜெயலலிதா) தங்கிய முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக செயல்பட்டது.
நான்கு ஆண்டுகளில் நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். கோடநாடு வழக்கை விசாரிக்க கூடாது என நீதிமன்றத்திற்கு எதற்காக சென்றீர்கள்.
நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது ஏன் கோடநாட்டில் பாதுகாப்பு அளிக்கவில்லை” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ‘கோடநாடு எஸ்டேட் தனியாரின் சொத்து, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த பின் அங்கு போடப்பட்டிருந்த பாதுகாப்பு அகற்றப்பட்டது.
வழக்கிற்கு நாங்கள் தடை கேட்கவே இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு முறைப்படி நடைபெற்று வருகிறது. எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.