சென்னையில் குடியரசுத் தலைவர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி அவர்களுடன் எடுக்கப்பட்டதாக போலியாக தயாரிக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி சிலர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்வதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு (வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு) காவல்துறையினர் தனிப்படை அமைத்து மோசடி கும்பலை தேடிவந்தனர்.
இந்நிலையில், காவல்துறையினரின் விசாரணையில் நெல்லூரைச் சேர்ந்த சேஷய்யா, சென்னையை சேர்ந்த டேனியல் ராஜ், பாளையங்கோட்டையைச் சேர்ந்த தியாகராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் தங்களுக்கு துணை குடியரசுத் தலைவர், முன்னாள் அமைச்சர்களை தெரியும் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த டேனியல் ராஜ் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் துறைமுகத்தில் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சரோஜா தேவி என்ற பெண்ணிடம் 13 லட்ச ரூபாய் மோசடி செய்ததும், தன்னை விஜயகுமார் ஐ.ஏ.எஸ் என்றும் தமிழ்நாடு ஆளுநரின் நேர்முக உதவியாளர் என்றும் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஏற்கெனவே, டேனியல் ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் பிணை வழங்கிய நீதிமன்றம்!