சென்னை பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் எழுத்தாளர் சாரு நிவேதிதா மீன்களை வாங்கியதாகவும், அவை அழுகிய நிலையில் விற்கப்பட்டுள்ளதாகவும் நேற்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை டேக்செய்து, பட்டினப்பாக்கம் அரசு மீன் அங்காடியில் தொடர்ந்து மூன்று முறை கெட்டுப்போன மீன்களே தன்னிடம் விற்பனை செய்யப்பட்டதாகவும், 1500 ரூபாய்க்கு கெட்டுப்போன அயிலா மீனை தனக்கு வழங்கிவிட்டதாகவும் புகார் தெரிவித்து, தனக்கு உதவுமாறு அவர் பதிவிட்டிருந்தார்.
சாரு நிவேதிதாவின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் கேலிக்கு உள்ளான நிலையில், மீன்வளத் துறை இணைச்செயலர் தன்னை அலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, ”இன்று மீன்கள் மாற்றப்பட்டுவிட்டன. இனி இப்படி யாருக்கும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததாக இன்று மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.
மேலும், வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட இவ்வளவு துரிதமாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று பாராட்டியுள்ள சாரு நிவேதிதா, முதலமைச்சருக்கும் அவரது குழுவினருக்கும் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர், நடிகர் எஸ்.வி. சேகர் தனது வீட்டருகே உள்ள ஆவின் பாலகத்தில் வாங்கிய பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போய்விட்டதாக முதலமைச்சரிடம் ட்விட்டரில் குற்றச்சாட்டு வைத்த சில மணி நேரத்தில், அவருக்கு புதிய பால் பாக்கெட்டுகள் அரசு அலுவலர்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
அந்த வகையில் எழுத்தாளர் சாரு நிவேதிதாவும், தற்போது மீன்வளத் துறை இணைச்செயலர் தன்னைத் தொடர்புகொண்டு உறுதி அளித்தாகத் தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க : அரசு மீன் அங்காடியில் அழுகிய மீன்கள்: முதலமைச்சரிடம் சாரு நிவேதிதா குற்றச்சாட்டு!