2011ஆம் ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுகவில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அமைச்சராக இருந்த சமயத்தில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக இவர் உள்பட பலர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்தக் காலகட்டத்தில் போக்குவரத்துத் துறையில் பணியில் இருந்த அலுவலர்களின் வீடு, அலுவலகங்களிலும் காவல் துறையினர் சோதனை செய்து முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றினர்.
அதனடிப்படையில், போக்குவரத்து மேலாண் துறை இயக்குநராக இருந்த கணேசன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கைப்பற்றிய ஆவணங்கள், விசாரணையின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் செந்தில் பாலாஜி, ஓய்வுபெற்ற எம்டிசி ஆல்பர்ட் தினகரன், ஓய்வுபெற்ற எம்.டி.சி. நிர்வாக இயக்குநரான வரதராஜன், ஓய்வுபெற்ற கூட்டு நிர்வாக இயக்குநர் அருண் ரவீந்திர டேனியல், முன்னாள் துணை மேலாளர் கணேசன் உள்பட 47 பேர் மீது எழும்பூர் சிசிபி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல்செய்துள்ளனர்.
அதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது உதவியாளர், அலுவலர்களுடன் இணைந்து பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு வெளியான நியமன பட்டியல் தகுதி பட்டியலின் அடிப்படையில் முறையாக வெளியாகவில்லை என்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செந்தில் பாலாஜியின் உதவியாளர்களான சண்முகம், எம். கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர் வரும் தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இரண்டு விஜயபாஸ்கரையும் டெபாசிட் இழக்க செய்யுங்கள்: கரூரில் ஸ்டாலின் பேச்சு!