இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது.
முதல்கட்டமாக இணையத்தை தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துகளிலும் பரவலாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிராமங்களில்கூட தகவல் தொழில்நுட்பம் சார்ந்து பிபிஓ நிறுவனங்களை தொடங்கமுடியும். மேலும், நகர்புறங்களில் இணைய சேவை இருந்தாலும் தடையின்றி கிடைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சென்னை மட்டுமல்லாது தென்மாவட்டங்களிலும் ஐடி தொழிற்பூங்களை கொண்டு வருவதற்கு அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப கொள்கையில் மாற்றம் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் படிக்கும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் கடமை அரசுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப துறையில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும்” என்றார்.