சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சென்னையில் இருக்கக்கூடிய தெலுங்குவாழ் மக்களும், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவளர்களும் இணைந்து ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்ததைக் கண்டித்து, அவரை ஆதரிக்கும் வகையில் "I AM WITH CBN" என்ற தலைப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
ஆந்திராவில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ஊழல் நடந்ததாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
மேலும், அவர் கைது செய்யப்பட்ட அன்றைய தினம், தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய பேருந்துகள் ஆந்திர மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டது. தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, ஆந்திர மாநிலம் முழுவதும் பதட்டமான இடங்களாக கருதப்படக்கூடிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடபட்டது.
அதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அவரின் கைதை கண்டிக்கும் வகையிலும் சென்னையில் இருக்கக்கூடிய சந்திரபாபு நாயுடுவின் ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சந்திரபாபு நாயுடு ஆதரவாளர் சத்யா தேவி கூறுகையில், “தென் மாநிலங்களில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஆந்திர மாநிலத்தில் கொண்டு வந்து, பல தலைமுறை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தவர், சந்திரபாபு நாயுடு.
அதன் பின்னரே பெங்களூரு, சென்னை என பல்வேறு மாநிலங்களில் தகவல் தொழில்நுட்ப புரட்சி உருவானது” என தெரிவித்தார். மேலும் தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, வழக்கில் எஃப்.ஐ.ஆர் போடாத நிலையில், ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், ஜெகன்மோகன் ரெட்டி, அவரைச் சுற்றியுள்ள தவறான நபர்களால் வழிகாட்டப்படுவதாகவும், இதற்கு விரைவில் ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆந்திர மக்கள் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 8ஆம் வகுப்பு மாணவிக்கு நோபல் உலக சாதனை விருது! 200 டியூப் லைட்டுகளை தொடையில் உடைத்து அசத்தல்!