சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வருகின்ற 14ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும் என்றும், காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (நவ.11) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நாளை (நவ.12) மற்றும் நாளை மறுநாள் (நவ.13) ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத்தொடர்ந்து வரும் அடுதெடுத்த நாட்களில், அதாவது நவம்பர் 17ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 செல்சியசாகவும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 32 செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடலில் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அப்பகுதி கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.