சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக, உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜன.9ஆம் தேதி முதல் ஜன.11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றும்(ஜன.7), நாளையும்(ஜன.8) மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வடகிழக்கு / கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "போகியில் பொருட்களை எரிக்க வேண்டாம்" சென்னை மாநகராட்சி புது முயற்சி!!