சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் (ஏப்ரல் 5), நாளையும் (ஏப்ரல் 6) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7-ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், வட உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவைப் பொறுத்தமட்டில் ஆயக்குடி (தென்காசி), திருப்பூண்டியில் (நாகப்பட்டினம்) தலா 5 சென்டி மீட்டரும், மானாமதுரையில் (சிவகங்கை) 4 சென்டி மீட்டரும், நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), பொன்னணியாறு அணை (திருச்சி), தேக்கடி (தேனி), சாத்தூர் (விருதுநகர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), ஏற்காடு (சேலம்) தலா 3 சென்டி மீட்டரும் மழைப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையே வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், "சமீப காலமாக சென்னையில் கோடை வெயில் அதிகமாகி வருகிறது. இது ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், உண்மையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும்போக்கு இருக்கிறது. தமிழகம் மற்றும் கடலோர நகரின் பல பகுதிகளிலும், வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது" என்றனர்.
இதையும் படிங்க: கருணாநிதி குடும்பத்திற்கு அடிமை சாசனம் - திமுகவினரை விளாசும் எடப்பாடி பழனிசாமி!