சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று (அக்.,31) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நவம்பர் 3ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது"
சென்னை வானிலை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
கடந்த 24 நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவான அதிகபட்ச மழைப்பதிவு: புழல் ARG (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் தலா 7, நாலுமுக்கு (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4.செ.மீ. முதல் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை: சென்னையில் இன்று காலை முதல் ஓரிரு இடங்களில் மட்டும், குறிப்பாக அம்பத்தூர், ஆவடி, அண்ணா நகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. தமிழ்நாடு முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று அதிகபட்சமாக புழல், திருப்பத்தூர், ஆரணியில் 7 செ.மீ மழை பெய்தது.
தமிழ்நாட்டின் அதிகபட்ச மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னதாக நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வட மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மேலும் மழை மாவட்டங்களான நீலகிரி, தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!