கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு, மாநில அரசு 144 தடை உத்தரவு என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் பால், மருந்து, மளிகை போன்றவற்றை தடையின்றி விற்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக வழக்கறிஞர் எம்.எல். ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதாக மனுவில் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி காவல்துறையினர் சாலையில் செல்பவர்கள் மீது தடியடி செய்கின்றனர் என்றும், சட்டத்திற்கு முரணாக செயல்படுபவர்களை கைது செய்து அவர்களை தண்டித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காவல்துறையினர் தாக்கும்போது சில இடங்களில் மக்களும் திருப்பி தாக்குவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடும்பட்சத்தில், இந்த மனு நீதிபதிகள் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட உள்ளது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு!