சென்னை: தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் வசந்தா (68) என்ற மூதாட்டி. இவர் கடையில் பொருள்கள் வாங்குவதற்காக ராமானுஜர் கூடம் என்ற தெரு வழியாகச் சென்றுள்ளார்.
அப்போது, தண்டையார்பேட்டை அம்மணி அம்மன் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ரமேஷ் (40) தெருவின் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வசந்தாவை பின்தொடர்ந்து வந்து பேச்சுக்கொடுத்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 4.5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளார்.
கைதும் விசாரணையும்
இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது அருகில் இருந்த கண்காணிப்புக் கேமராவை சோதனையிட்டபோது மோட்டார் சைக்கிள் எண்ணைக் கொண்டு அந்த நபரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து வீடு மாறி இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடிய நிலையில் அந்த நபர் எம்.சி. சாலையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் ரமேஷை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
காவலர்களுக்குப் பாராட்டு
விசாரணையில், கரோனா காலத்தில் வறுமையால் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இதுபோன்று வழிப்பறியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தார். பின்னர் காவல் துறையினர் ரமேஷ் மீது வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.
காவல் துறையினரின் மின்னல் வேக நடவடிக்கையால் நான்கு மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்த காவலர்களை துணை ஆணையர் சிவபிரசாத் பாராட்டினார்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது