சென்னை, கோபாலபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 70). இவர் நேற்று முன் தினம் (செப்.22) காலை தனது மனைவியுடன் அண்ணா சாலை, சர்ச் பார்க் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், குமாரின் மனைவியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த ஆறு கிராம் தாலியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதேபோல் சென்னை, ராயபுரம், ராமன் தெருவை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 23), செப்டம்பர் 22ஆம் தேதி காலை ராயபுரம் என்.ஆர்.டி பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து, கத்தியால் குத்தி செல்போனை பறிக்க முயன்றுள்ளார். அதற்குள் பைக்கில் வந்த மற்றொரு நபர், முகமது யூசுப்பின் செல்போனை பறிக்க, தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும் ஒரே பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, தாண்டவராயன் தெருவைச் சேர்ந்தவர் பொன்னம்மா (வயது 65), செப்டம்பர் 22ஆம் தேதி வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போடுவதற்கு வெளியே சென்றபோது காம்பவுண்ட் சுவருக்குள் மறைந்திருந்த இரண்டு நபர்கள், கத்திமுனையில் அவரது 4.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையைச் சேர்ந்த பவானி (வயது 36). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி இரவு வீட்டின் அருகே உள்ள மருந்து கடைக்குச் சென்றுவிட்டு திரும்பிய பவானி, தெரு வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது டியோ பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பவானி கையில் இருந்த பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். அதில் அரை சவரன் தாலி, இரண்டு குண்டு மணி தங்கம், 1000 ரூபாய் பணம் இருந்துள்ளது.
இதேபோல தாம்பரத்தைச் சேர்ந்த ஜோதி (வயது 52) என்பவர் ராயபேட்டை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 22ஆம் தேதி, அறுவை சிகிச்சைக்காக தான் அணிந்திருந்த ஒன்பது கிராம் நகைகளைக் கழட்டி பர்சில் வைத்து விட்டு சிகிச்சை முடிந்து வந்து பார்த்தபோது, நகை மற்றும் 1,500 ரூபாய் பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி்யடைந்துள்ளார்.
ஓட்டேரி பகுதியில் வசித்து வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர் உமர் பரூக் (வயது 14). இவர் தனது வீட்டருகே நின்று கொண்டிருந்தபோது குடிபோதையில் வந்த தில்லை ராஜ் (வயது 25) என்பவர் அம்மாணவரை சரமாரியாகத் தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளார்.
பின்னர் பணம் ஏதும் இல்லாததால் அவரை விட்டுவிட்டு அந்நப தப்பிச் சென்ற நிலையில், காயமடைந்த மாணவர் கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். பாதிக்கப்பட்ட நபர்கள் அந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் நடந்த செல்போன், ஏராளமான திருட்டு சம்பவங்களால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேலம் ஆயுதப்படை காவலர் கடன் தொல்லையால் தற்கொலை