சென்னை: தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை 2018-19ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. 2018 -19 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்கள் 97 நிரப்புவதற்குப் போட்டி எழுத்துத்தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
அதனடிப்படையில் இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இந்த 42 ஆயிரத்து 686 தேர்வர்களுக்கு 2020 பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் தற்காலிக விடை குறிப்புகள் 2020 பிப்ரவரி 26 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
2021 ஜனவரி 27ஆம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணிக்கான இறுதி விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்தல் தவறாகக் கேட்கப்பட்ட விடையின் 52க்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் தகுதி பெற்ற தேர்வர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தொடக்கக்கல்வித்துறையில் மேலும் 23 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிசம்பர் 28ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் கூடுதலாக வெளியிட்டது. மேலும் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்விலிருந்து 120 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. ஒரு பணியிடத்திற்கு இரண்டு நபர்கள் என அழைக்கப்பட்டு ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் நேரம் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் போது தேர்வர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் குறித்த விபரங்கள் அனைத்தும் தேரின் இமெயில் முகவரிக்கும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலிருந்து அழைப்பு கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொண்டு கலந்து கொள்ளலாம்.
எவருக்கும் நேரடியாகச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட மாட்டாது. ஏற்கனவே இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் அதன் பின்னரே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேவையான அனைத்து சான்றிதழ்களையும் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், ஏதாவது குறைகள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இமெயில் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜன.31 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!