மின்சார சட்டம் 2003-இல் திருத்தத்தை மேற்கொண்ட மத்திய அரசு, மாநில அரசுகள் வழங்கிவரும் இலவச மின்சாரத்தை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக மின் மானியம் வழங்க அறிவுறுத்தியது.
இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெடினை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது 3.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் விநியோக கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மின் விநியோகத்தில் தனியார் துறைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எந்த நிறுவனத்திலிருந்து மின்சாரத்தை பெறலாம் என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம் என கூறினார்.
நிதியமைச்சரின் இந்த அறிவிப்பால் மின்சாரத் துறை முழுமையாக தனியார் கைகளுக்கு போகும் என மக்கள் பலரும் போராட்டத்தில் இறங்கினர். அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தன.
இலவச மின்சாரத்தை பெற்றால்தான் சரிவர விவசாயம் செய்ய முடியும், இந்த நேரடி மானிய திட்டத்தால் நாங்கள் பெரிதும் பாதிப்படைவோம் என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அரசின் இந்த நேரடி மானிய திட்டத்தால் ஏழை மக்களும் வெகுவாக பாதிப்படைவார்கள் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. அதுமட்டுமல்லாது சிறு, குறு தொழில்களும் பெரும் பாதிப்பை சந்திக்கும். இது தொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி பிரதமர் பார்வைக்கு பலரும் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், எந்த பயனும் இல்லை.
இந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று வரும் கட்சி, இது குறித்து மத்திய அரசிடம் பேசி பழைய திட்டத்தையே தொடர வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.