சென்னை: சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசி தம்பதியின் மகன் விவேக் ஜெயராமன். தனியார் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் என்கிற கட்டை பாஸ்கர்.
பர்னிச்சர் தொழில் செய்து வரும் பாஸ்கர், ஆந்திரா மாநிலத்திலிருந்து செம்மரக் கட்டைகளை பல்வேறு நாடுகளுக்குக் கடத்தியதாக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலாவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திய போது, கட்டை பாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு செம்மரம் கடத்தியதாக பாஸ்கர் மீது மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, அண்ணா நகரில் உள்ள அவரது வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தினர்.
கடையில் சட்ட விரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையே கடந்த 2021ஆம் ஆண்டு செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் பாஸ்கரை ஆந்திரா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீன் கிடைத்து பாஸ்கர் வெளியே வந்தார்.
இந்நிலையில் 48 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் கடத்தல் விவகாரத்தில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாஸ்கரின் அலுவலகத்தில் வைத்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.பல மணி நேர விசாரணைக்குப் பின்னர் பாஸ்கரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் கைது