சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அண்ணாமலை, "பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு கடந்த ஒரு மாதத்தில் 76 மத்திய அமைச்சர்களை அனுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பயனாளிகள் ஏதாவது குறை கூறுகின்றார்களா? என்பதை கண்டறியும்படி கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் வந்திருக்கிறார். அடுத்த 20 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு லஞ்சம் இல்லாமல் சென்றடைகின்றதா? என்பதை பார்வையிடுவதற்காக மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கின்றனர்" என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பியூஸ் கோயல், "ஊழலற்ற தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நினைக்கிறார். மக்கள் நலனின் ஆர்வம் காட்டாமல் குடும்ப நலனில் திமுக ஆர்வம் காட்டுகிறது. மத்திய அரசு திட்டங்கள் மூலம் பிரதமர் மோடியை மக்கள் ஆதரிப்பார்கள் என்ற காரணத்திற்காக மாநில அரசு, மத்திய அரசின் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில்லை. திமுக அமைச்சர்கள் மத்திய அரசின் திட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று மக்கள் பயன் பெற உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு முகாம்கள் விரைவில் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படும்" என்றார்.