சென்னை கிண்டியில் உள்ள சிப்காட் பயிற்சி மையத்தில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா மத்திய கல்வி நிறுவனத்தின் ஆண்கள் விடுதியை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர், ”இன்னும் ஒரு சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஒரு ரூபாய்க்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். தமிழ்நாட்டில் பிளாஸ்டிகை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க நிபுணர்களிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், பொருளாதார மந்தநிலை சரி செய்ய நிதியமைச்சர் உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிகளை தளர்த்தி வரிகளை குறைத்துள்ளார். இது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு 70 கோடி விவசாயிகளுக்கு உர மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு 80 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதனையடுத்து பேசிய சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா. சுப்ரமணியன், ”பிரிட்டானியா, குர்குரே மற்றும் லேஸ் ஆகிய நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்திவருவதை உடனடியாக தடை செய்ய வேண்டும். நாடு முழுவதும் பிளாஸ்டிக் தடையை கொண்டு வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.