சென்னை: மோடி @ 2020 புத்தக அறிமுக விழா போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் உள்ள விழா அரங்கில் நடைபெற்றது. பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மூத்தத்தலைவர் ஹெச்.ராஜா, ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம், இந்து நாளிதழ் தலைவர் மாலினி பார்த்தசாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புத்தகத்தை அறிமுகப்படுத்திய பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “20 ஆண்டுகளாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளில் மோடி உள்ளார். ஆனால், தற்போது கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் மோடியைத் திரும்ப, திரும்ப தேர்வு செய்கிறார்கள். மக்களுக்கு என்ன செய்தீர்கள், சொன்னதை நிறைவேற்றினீர்களா எனப் பார்த்து தேர்வு செய்கின்றனர்.
அடிப்படையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ளேன் என மோடி கூறி உள்ளார். 2008 - 2009 பொருளாதார வீழ்ச்சியினை அப்போதைய அரசு முறையாக கையாளவில்லை. இப்போதும் நமக்கு இந்தப் பிரச்னை வந்துள்ளது. கரோனா ஊரடங்கு, ரஷ்யா - உக்ரைன் போரால் பல நாடுகள் பாதிக்கப்பட்டு பின் தங்கி வரும் நிலையில் அவற்றை சமாளித்து இந்தியா வளர்ந்து வருவதாக புள்ளி விவரங்கள் உள்ளன.
இந்தியாவில் கரோனா ஆரம்ப கட்டத்தில் பாதுகாப்பு உடை, தடுப்பூசி இல்லாமல் இருந்து வந்தோம். தற்போது தடுப்பூசியை முன்னேறிய நாடுகளுக்கு இணையாக தயாரித்து வருகிறோம். இதற்கு பிரதமர் மோடி தான் காரணம். தடுப்பூசியை 200 கோடி மக்களுக்கு கொடுத்துவிட்டோம். சொன்னதை செய்பவர் மோடி. அதனால் தான் மக்கள் அவரைத் தேர்வு செய்கின்றனர்.
அணைகட்ட முடியாத அளவுக்கு ஊழல் இருந்தது. குஜராத் மின் மிகை மாநிலமாக உள்ளது. மோடி குறுகிய மனப்பான்மையோடு எப்போதும் செயல்படவில்லை. ஏழை மக்கள் வங்கிக்கணக்கில் பணம் இருக்காது என ஏளனம் செய்தனர். அந்த வங்கிக்கணக்குகளில் தற்போது ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வைத்துள்ளனர். ஏழையின் கஷ்டத்தை உணர்ந்தவர், பிரதமர் மோடி.
70 ஆண்டுகளாக மேல் தட்டு மக்களுக்கு கிடைத்த பத்ம விருதுகளைத் தற்போது பாமர மக்களுக்கும், சாமானிய மக்களுக்கும் வழங்கியுள்ளனர். அது மக்களின் விருதாக உள்ளது. இதுதான் அடிப்படை மாற்றத்திற்கான உதாரணம் . உலக அளவில் இந்தியாப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. ‘என்ன இல்லை இந்த திரு நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்’ என்ற எம்ஜிஆர் பாடல் வரிகளுக்கு ஏற்பவும் முன்னேற்றி வருகிறார். காமராஜர் கனவையும் மோடி நினைவாக்குகிறார்” என்றார்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, ''ஜிஎஸ்டி வரி குறித்துப்பேச யாருக்கும் அருகதை இல்லை. அரிசி மீது ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது என யாரும் வதந்தியைக்கிளப்ப வேண்டாம். பிராண்டட் அரிசிகளுக்கு மட்டும் வரி உயர்த்தப்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கூட அதிமுக பொதுச்செயலாளர் ஆகலாம் - கிண்டலடித்த டிடிவி தினகரன்