சென்னை: பொதுமக்களின் கேஒய்சி ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஜிஎஸ்டி பதிவுகளைச் செய்து, மூவர் சரக்கு மற்றும் சேவை வரி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவர், 44 போலி நிறுவனங்களை தொடங்கியிருந்ததும், அவற்றில் 24 போலி நிறுவனங்களை அவரே சொந்தமாக நடத்தி இதர நிறுவனங்களுக்கு போலி ரசீதுகளை வழங்கி உள்ளீட்டு கடன் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீதமுள்ள 20 நிறுவனங்களை இம்மாதிரியான மோசடிக்காக மற்றவர்களுக்கு விற்றுள்ளார். இதுதவிர, 56 போலி நிறுவனங்களுக்கு கமிஷன் ஏஜென்டாகவும் செயல்பட்டுள்ளார். இதன் மூலம் சரக்குகள் மற்றும் சேவைகளை வழங்காமலேயே போலி ரசீதுகள் பெருமளவில் உருவாக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டாவது நபர், வேலூரில் பழைய பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர். தனது நிறுவனத்திற்காக போலி ரசீதுகளை பயன்படுத்தியதோடு, இம்மாதிரியான குற்றங்களில் இதர நிறுவனங்களுக்கான கமிஷன் ஏஜெண்டாகாவும் அவர் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்றாவது நபர் பணத்திற்காக தனது கேஒய்சி ஆவணங்களான பான், ஆதார் அட்டைகள் மற்றும் புகைப்படத்தை வழங்கியுள்ளார். பணத்திற்காக கேஒய்சி ஆவணங்களை வழங்கும் கும்பலின் முக்கிய உறுப்பினராக இவர் செயல்பட்டுள்ளார்.
2021 மார்ச் 11 அன்று கைது செய்யப்பட்ட இம்மூவரும், எழும்பூர் பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அமமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு