சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை டிசம்பர் 4ஆம் தேதி அன்று புரட்டிப்போட்ட 'மிக்ஜாம்' புயல் (Michaung) டிசம்பர் 5ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. இந்த புயல் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது.
அந்தவகையில், சென்னையைப் பொருத்தவரை வடசென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் பாதிப்புகள், கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விடச் சற்று மோசமாக இருந்தது. அதே நிலை தான் சென்னையைச் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களிலும் காணப்பட்டது.
இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களையும் ஆய்வு செய்வதற்காக கடந்த ஏழாம் தேதி சென்னை வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். அதன் பின்னர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் கூறினார். மேலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சீரமைக்க இடைக்கால நிவாரணமாக 5 ஆயிரத்து 60 கோடி ரூபாய் வழங்குமாறு பிரதமருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் நிவாரணத் தொகையை விரைந்து வழங்குமாறு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், மாநில பேரிடர் நிதியாக 450 கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்க பிரதமர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மத்திய தொழில் முனைவோர் மற்றும் நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று (டிச.9) சென்னைக்கு வந்து, பாதிப்பு ஏற்பட்ட இடங்களான காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், மழை வெள்ளம் பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு 2 நாள் பயணமாக, நாளை (டிச.11) சென்னை வரவிருக்கிறது. அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த குழு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளது. அதன் பின்னர் நாளை மறுநாள் (டிச.12) காலை, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளருடன் ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ.4,000 கோடிக்கான வெள்ளை அறிக்கை வேண்டும்.. அரசியல் கட்சிகள் முதல் பொதுமக்களின் அதிருப்தியான கேள்வி!