சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் கூறி, அதைத் தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த விதிகளைச் செல்லாது என அறிவிக்கக்கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன், பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை சார்பில் அதன் துணைச் செயலாளர் அமரேந்தர் சிங் பதில் மனு தாக்கல்செய்துள்ளார். அதில், "சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ, பரப்பவோ கூடாது.
நாட்டின் ஒற்றுமை இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலைப் பகிர்வது போன்ற செயல்பாடுகளைத் தடுக்கும் வகையிலேயே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓடிடி தளங்களில் பதிவேற்றம் செய்பவற்றை ஏழு மற்றும் 13 வயதினருக்கானது என வகைப்படுத்தி வெளியிட வேண்டும் என விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்கீழ் மூன்று குறைதீர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் குறைதீர் அமைப்புகளை வைத்திருக்க வேண்டும். அவை சுய ஒழுங்குமுறை அமைப்பாக இருக்க வேண்டும். இதுதவிர தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திலும் ஒரு குழு இருக்கும்.
சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய பதிவை அரசோ அல்லது நீதிமன்றமோ நீக்கும் வகையில் இருந்த விதிகளை மாற்றி, சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனங்களே முடக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
செய்தி வெளியீட்டாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்கும் வகையிலேயே விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. விதிகளைக் கொண்டுவர அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது, அரசியல் சாசன விதிகளை மீறவில்லை, அதனால் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளின் விசாரணையை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, செப்டம்பர் 14ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்வானார் எம்.எம். அப்துல்லா