சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான இறுதிச்சுற்றுக் கலந்தாய்வினை தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு நடத்தி முடிவுகளை செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசிற்கு அனுமதி வழங்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசு மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு எழுதிய கடிதத்தில், ”ஒன்றிய அரசு செப்., 30ஆம் தேதி 2023க்குள் நடப்பு கல்வியாண்டில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான இளங்கலை (MBBS மற்றும் BDS) மருத்துவ சேர்க்கைக்காக, தமிழ்நாடு மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகம் (DGHS) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் 4 சுற்று கவுன்சிலிங்கை முழுமையாக நிறைவு செய்துள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் மாநில அரசால் நிரப்பப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 16 இடங்கள் DGHSஇன் MCCயின் கவுன்சிலிங்கின் முடிவில் இன்னும் காலியாக உள்ளது.
மேலும், மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், தமிழ்நாட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் (மேலாண்மை ஒதுக்கீடு) காலியாக உள்ளன.
ஒவ்வொரு எம்பிபிஎஸ் இடமும் விரும்பத்தக்கது மற்றும் மதிப்புமிக்க தேசிய வளம் என்பது உங்களுக்குத் தெரியும். மேலும் இந்த இடங்களுக்கு வருவதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, மேலும் கவுன்சிலிங் நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தால், இந்த விலைமதிப்பற்ற இடங்களை நிரப்ப முடியும்.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த மாணவர்களுக்கு சிறப்பு அமர்வுகளை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு இடமளிக்க முடியும். குறிப்பாக மாணவர்களுக்கும் பொதுவாக நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் சாதகமான பதிலைப் பெறுவோம் என்று நம்புகிறோம்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அஜித்தை இயக்கும் மார்க் ஆண்டனி பட இயக்குநர் - அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?