சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று காவல்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தாலும் முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் போதைப்பொருட்கள் பரவியதற்கு மத்திய அரசு மட்டுமே காரணம்.
குஜராத் மாநிலத்தில் தான் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகமாக உள்ளது. அதற்கு முக்கிய காரணம் குஜராத்தில் உள்ள முத்ரா துறைமுகம் தனியார் மயமாக்கப்பட்டதே. இதனால் வெளிநாடுகளில் இருந்து எளிதில் போதைப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து போதைப்பொருள்கள் வருகின்றன. அதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயவாடா துறைமுகம் மூலமே தமிழ்நாட்டிற்கு அதிக போதைப்பொருட்கள் வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 9.19 கோடி மதிப்பீட்டிலான 152.94 டன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் எடுத்த நடவடிக்கை காரணமாக 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 20,241 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 246 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் குட்கா குறித்து பேசியதற்கு வெளியேறிய நபர்கள் தற்போது போதைப்பொருட்கள் அதிகரித்துவிட்டதாக பேசுகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமா? வேண்டாமா? என்பது ஒவ்வொரு நபர்களின் கொள்கை சார்ந்தது. விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அளித்தது அண்ணா, தற்போதும் விடுமுறை அளித்து வருகிறோம். எங்களை பொறுத்தவரை அனைத்து மதமும் அனைத்து சாதியும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்.
திமுகவில் முதல் பட்டதாரி யாரேனும் இருக்கிறார்களா என்று அண்ணாமலை கேட்கிறார், அண்ணா முதல் பட்டதாரி என்பதை அண்ணாமலை நினைவில் வைத்துகொள்ள வேண்டும். நானும் முதல் பட்டதாரியே. புதிய கல்வி கொள்கையை பொறுத்தவரை முழுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். அதனை தெளிவாக முதலமைச்சர் ஸ்டாலின் துணை வேந்தர் மாநாட்டில் தெளிவாக கூறிவிட்டார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய அமலாக்கப்பிரிவின் சம்மன் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு