சென்னை தலைமைச் செயலகத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் வருவாய் 18% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கும் அளவு மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவிற்குள் இருக்கிறது. பொருளாதார வளர்ச்சி நேர்மையாக இருக்கும். அரசு கடன் வாங்கும் வரம்பினை மீறவில்லை. மாநில மொத்தக்கடன் ஆனது 15ஆவது நிதிக் குழு அளித்த குறியீடுக்குள் தான் உள்ளது. அடுத்த நிதியாண்டில் கடன் வாங்கும் அளவு குறையும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசு காரணம் இல்லை. மத்திய அரசின் வரி விதிப்பு தான் விலையேற்றத்திற்குக் காரணம். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 2.02 விழுக்காடாக இருக்கும். தேசிய அளவில் எதிர்மறை வளர்ச்சி இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் நேர்மறை வளர்ச்சி இருக்கும்.
நடப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு புதிய வரி ஏதும் விதிக்காமல் வருவாய் கணக்கீடு இருக்கும். இந்த நிதி ஆண்டில் வேளாண்மை, அதை சார்ந்த துறைகளில் வளர்ச்சி இருக்கும். மற்ற துறைகளில் 1.6 விழுக்காடு வளர்ச்சி இருக்கும். 2 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் இந்த ஆண்டு அரசு செலவு செய்துள்ளது. இந்த ஆண்டு 18 விழுக்காடு அரசுக்கு (40 ஆயிரம் கோடி) வருமானம் குறைந்துள்ளது.
இந்த நிதியாண்டில் மத்திய வரிவருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு 32 ஆயிரத்து 849 கோடி ரூபாய் வர வேண்டும் எனக் கணக்கிட்டோம். ஆனால், 23 ஆயிரத்து 39 கோடியாக குறைந்தது.
இந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. கரோனா காரணமாக சுகாதாரத்துறைக்கு மட்டுமே இரண்டாயிரத்து 500 கோடி ரூபாய் செலவாகியுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சர்வதேச சந்தையே பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்