வங்கிகளில் வாகன கடன் வாங்கி மோசடி செய்ததில், பால விஜய் (35) நீலாங்கரையை சேர்ந்த முகமது முசாமில் (34), அய்யாதுரை (32) ஆகிய 3 பேரைக் கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதான பால விஜய் என்பவர் பிரபல கார் பந்தய வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2010 முதல் 2014ஆம் ஆண்டுகளில் பல கார் பந்தயங்களில் இவர் பங்கு பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
கிரிக்கெட்டில் ஐபிஎல் போலவே கார் பந்தயங்களில் நடத்தப்பட்ட லீக் ஆட்டங்களில் மோட்டோ ரேவ் என்ற அணியை உருவாக்கி அதன் உரிமையாளராகவும், கார் பந்தய வீரராகவும் பால விஜய் இருந்துள்ளார். கார் லோன் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்டது பால விஜய் என்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. வங்கி மேலாளர், கார் டீலர் இருவரது உடந்தையுடன் பால விஜய் பல சொகுசு கார்களுக்கு லோன் வாங்கி மோசடி செய்ததும் உறுதியானது.
குறிப்பாக ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களை மட்டுமே வாங்க லோன் போட்டுள்ளார். சொகுசு கார் வாங்கும் அளவிற்கு வசதியானவர் என காட்ட சினிமா பாணியில் பங்களாக்களையும், கார்களையும் வாடகைக்கு எடுத்து வங்கிகளை நம்ப வைத்திருக்கிறார் பால விஜய். இவர், முன்னாள் கார் பந்தய வீரர் என்பதாலும் வங்கிகள் நம்பி கடனளித்துள்ளன. இந்த மோசடிக்கு உடந்தையாக வங்கி மேலாளர் ஒருவர் இருந்ததால் கார் லோன் வாங்கப்பட்ட வங்கிகளுக்கு சந்தேகம் வராமல் இருந்துள்ளது.
பொதுவாக கார் லோன் வாங்கினால் அதற்கான பணம் கார் ஷோரூம் டீலர்களின் வங்கி கணக்கிற்கு செல்லும், அதை அறிந்து சொகுசு கார் டீலர் ஒருவரின் உடந்தையுடன் பால விஜய் வங்கிக்கணக்கிற்கு, காருக்கான லோன் பணம் வந்து சேரும்படி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
சொகுசு கார்கள் வாங்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் எல்லாம் கிடைத்த பிறகு, அந்த ஆவணங்களை வங்கிக்கு சமர்ப்பித்துவிடுகின்றனர். இதனால் கொடுக்கப்பட்ட பணம் முறையாக சொகுசு கார் வாங்க பயன்படுத்தப்பட்டது என வங்கி நிர்வாகத்தினரும் நம்பிவிடுகின்றனர்.
அதன்பின் சொகுசு கார்கள் வாங்கிய 20 நாட்களிலேயே ஏதாவது ஒரு குறையைத் தெரிவித்து, பால விஜய் சொகுசு கார்களை திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து பணம் மீண்டும் பால விஜய் வங்கி கணக்கிற்கு சேர்ந்து விடுவதால், அதை 80 விழுக்காடு பால விஜய், அய்யாதுரை, முகமது முசாமில் ஆகியோர் எடுத்துக்கொண்டு உடந்தையாக இருந்த கார் டீலர், வங்கி மேலளாருக்கு 20 விழுக்காடு கொடுத்துவிடுகின்றனர்.
மோசடியின் ஹைலைட்
வங்கியில் லோனுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர், ஏற்கனவே லோன் பெற்றுள்ளாரா என அறிய வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கென சிபில் ஸ்கோர் என்ற அளவீடு கொடுக்கப்படும். இதனை பால விஜய்யின் வங்கிக்கணக்கில் கண்டுப்பிடிக்க முடியாதபடி மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய கார் டீலர், வங்கி மேலாளரை ஆதாரங்களுடன் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கைதான கார் பந்தய வீரர் பால விஜய், தரகர் அய்யாதுரை, முகமது முசாமில் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.