சென்னை: வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது.
இதனையடுத்து தமிழக அரசு நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட மத்திய குழு டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்தது.
இக்குழுவானது இரு குழுக்களாக பிரிந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மத்திய குழுவின் தலைவரான, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, தலைமையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் திமான் சிங், மின்துறை இணை இயக்குனர் ரங்கநாத் ஆடம் உள்ளிட்டோர் வேளச்சேரி பகுதியில் உள்ள ஏஜிஎஸ் காலனி, புவனேஸ்வரி நகர், செல்வா நகர் உள்ளிட்ட இடங்களில் சேதம் அடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் மத்திய குழுவின் தலைவரும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகருமான குணால் சத்யார்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெள்ள பாதிப்புகளை உடனடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி, இன்று வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை நாங்கள் ஆய்வு செய்தோம். மேலும், தமிழ்நாடு அரசு வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை விட இப்பொழுது ஏற்பட்ட வெள்ள பாதிப்பானது குறைவாக உள்ளது.
தகவல் தொடர்பு மின்சாரம் மற்றும் விமான நிலைய சேவைகள் உள்ளிட்டவை உடனடியாக சரி செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும், வெள்ள பாதிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு அனைத்து உதவிகளும் செய்ய தயார் நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ”வானம் பிளந்து, பத்து கங்கை கொட்டினாலும் பாதுகாக்க வேண்டும்” - பொன். ராதாகிருஷ்ணன்