சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் (39), இவர் கொளத்தூர் ஸ்ரீனிவாச நகரில் சொந்தமாக செல்போன் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 10) இரவு அஸ்லாம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் இன்று (ஆகஸ்ட் 11) காலை இவரது கடைக்கு அருகே உள்ள மளிகைக் கடையில் பணிபுரிந்து வரும் பாண்டியன் என்பவர், செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அஸ்லாமுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் கடைக்கு வந்து பார்க்கும் போது கடையிலிருந்த ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், லேப்டாப், 15 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அஸ்லாம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தொப்பி அணிந்து வந்த ஒருவர் கையில் இரும்பு கம்பியுடன் செல்போன் கடையின் பூட்டை உடைத்து உள்ளிருந்த செல்போன், லேப்டாப், பணம் ஆகியவற்றை திருடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
மேலும் இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை ராஜமங்கலம் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடு புகுந்து கொள்ளை முயற்சி - விரைந்து செயல்பட்ட காவல்துறை