சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவகுமார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமல்லாது சென்னை ரவுடிகளின் பட்டியலில் இவரது பெயரும் முக்கியமான இடத்தில் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் தேடப்பட்ட சிவகுமார், தனது சகோதரியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார். அங்கு வைத்து அவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். சில நாள்களுக்கு முன் பிணையில் இவர் வெளியே வந்தார்.
இந்நிலையில், சிவகுமாரை அசோக் நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஜஸ்டின் என்பவரின் அலுவலகத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்தனர்.
இது தொடர்பாக அசோக்நகர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில், சிவகுமார் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இந்தக் காட்சியில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆட்டோ, இருசக்கர வாகனத்தில் வந்து தொழிலதிபர் ஜஸ்டின் அலுவலகத்திற்குள் நுழையும் காட்சி பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக அசோக்நகர் காவல் துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ரவுடி தோட்டம் சேகர் என்பர் படுகொலைசெய்யப்பட்டார். அந்தக் கொலையில் சிவகுமாருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதற்குப் பழிதீர்க்கும் வகையில் தோட்டம் சேகரின் கூட்டாளிகள் இந்தக் கொலையை அரங்கேற்ற திட்டம் தீட்டியதாகக் காவல் துறை தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சிவகுமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரவுடி தோட்டம் சேகரின் சகோதரர்களான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அழகுராஜா (22), பாலாஜி (24), பாண்டியன், ரோகித் ராஜ், விஷ்ணு ஆகிய ஐந்து பேர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.