சென்னை: தாம்பரம் அடுத்த கடப்பேரி, கண்ணன் தெருவில் ராஜகோபால் என்பவர் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (அக்.5) மதியம் வாடிக்கையாளர் ஒருவர் மது அருந்திவிட்டு ஹோட்டலில் வந்து சாப்பிட பிரியாணி கேட்டு உள்ளார். கடையில் இருந்த ஊழியர் சங்கர் பிரியாணி கொடுத்து உள்ளார்.
சாப்பிட்ட பிறகு, வாடிக்கையாளரிடம் சாப்பிட்ட உணவிற்கு பணம் கேட்டதற்கு, சிறிது நேரம் ஹோட்டலின் வெளியில் சென்று யோசித்து விட்டு பணம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பணத்தை கொடுத்து விட்டு கோபத்தோடு என்னிடமே பணம் கேட்கிறாயா நான் யார் தெரியுமா? என்று சங்கரை மிரட்டி விட்டு, ஆட்டோவை வேகமாக இயக்கிச் சென்று உள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பின் 6 நபர்களை அழைத்துக் கொண்டு, மீண்டும் ஹோட்டலுக்கு வந்து ஊழியரை நாற்காலி மற்றும் குழம்பு வாளியைக் கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்று உள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் ஹோட்டலில் பொருத்தி இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த தாக்குதலில் சங்கருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறையிடம் சங்கர் புகார் கொடுத்து உள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தாக்குதலில் ஈடுபட்ட கருப்பு என்ற வெங்கடேஷ், சுரேஷ் என்ற உதயா ஆகிய இருவரை கைது செய்து ஆபாசமாக பேசுவது, ஊழியரைத் தாக்கி காயம் விளைவித்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மயிலாடுதுறை மாவட்டத்தில் வெடி தயாரிப்பு நிறுவனங்களில் பாதுகாப்பு தன்மை குறித்து மறுஆய்வு செய்ய உத்தரவு!